சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி
.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும், அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது. இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.
காட்மாண்டு சுபதீசுவரர் கோவிலில் சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும் உயர்வான சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால் நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.
பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர். நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான உலோகத்தினாலான நந்தியின் சிலை உள்ளது. தென்னிந்திய கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம் வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும் அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.
மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன் சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி பரவசம் கிடைக்கும். நினைத்த எண்ணங்கள் கைகூடும் என்றும் சொல்வார்கள்.
சிவராத்திரியன்று மடி ஆசாரத்துடன் சாப்பிடாது உபவாஸமிருந்து, இரவு பூராவும் கண் விழித்து சிவ தரிசனம் செய்து, மறுநாளும், மடியாக சிவதரிசனம் செய்து, தான தர்மங்கள் செய்து பாரணை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகலும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சிவனுக்குப் பூஜிக்கத் தகுந்த இலை வில்வம்.இந்த வில்வ தளப் பெருமையை பீஷ்மப்பிதாமஹர் அம்புப்படுக்கையில் இருக்கும்போது கூறிய ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது.
சித்ரபானு என்கின்ற ஒரு மன்னன் வேட்டையாடி ஒரு மானை எடுத்துக்கொண்டு வரும்போது இரவு நேரமாகிவிட்டது. ஒரு மரத்தின்கீழ் அதைப் போட்டுவிட்டு,,மரத்தின்மேலே இரவைக்கழிக்க, அதன்ஏறி உட்கார்ந்து கொண்டான். விழிப்புணர்வுடன் இருப்பதற்காக மரத்தின் ஒவ்வொரு இலையாகக் கிள்ளி கீழே போட்டுக் கொண்டும்,குடுவையிலிருந்த நீ்ர் சிந்திக் கொண்டும் இருந்தது.கண்களைத் துடைக்கும் போது நீர் கீழே சிந்திக் கொண்டும் இருந்திருக்கிறது. காலையில் மானுடன் அவர் அரண்மனை போயாகிவிட்டது.
காலப்போக்கில் அவர் காலகதி அடைந்தபோது, சிவதூதர்கள் அவருக்கு இராஜ உபசாரம் செய்து அழைத்துப் போனபோது அவரறியாது செய்த புண்ணியத்தின்பலன் தெரியவந்தது. அவர் ஏறி இருந்த மரம் வில்வமரம்.மரத்தினடியில் சிவலிங்கமிருந்திருக்கிறது.
அவரறியாமலே செய்த சிவராத்ரி பூஜையின் பலன் அவருக்கு, அதுவும் பூர்வ ஜன்மத்தில் செய்தது நல்ல கதியைக் கொடுத்ததாக மஹாபாரத சாந்தி பர்வத்தில் பீஷ்மரால் கூறப்படுகிறது.
ஸகல பிரபஞ்ஜமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானதுஆவிர்பவித்த மஹா சதுர்த்தசி இரவில்.அவரை அப்படியே ஸ்மரித்துஸ்மரித்து அவருக்குள்நாம் அடங்கி இருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை என்று ஸ்ரீ ஸ்ரீீ மஹா பெரியவாள் தன்னுடைய தெய்வத்தின் குரலில் சொல்லி இருக்கிறார். அதை விட வேறு எந்த வாக்கு பெரியது?
நாராயணா என்னா நாவென்ன நாவே நமசிவாயா யென்னா நாவென்ன நாவே.
திரிகுணம்,திரிகுணாகாரம்,திரிநேத்ரஞ்சதிரயாயுஷஹ
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்.
நம் எல்லா சிவாலயங்களிலும் அவரவர்களுக்கு அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சிவனை வழிபட்டு உலக நன்மைகளுக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
நான்கு ஜாமங்கள் என்பது மாலை 6–30 மணி, 9—30மணி, 12—30 மணி 3. மணி என்பர்.
ஓம் நமசிவாயநமஹ.