Sunday, 27 December 2020

⭐ "ராம" நாமம் "தாரக" மந்திரம் ⭐ திருக்கதைகள் | bhakthivlog

 ♻ ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்  ♻

⭐  "ராம" நாமம் "தாரக" மந்திரம் என்று  

                                    கூறப்படுகிறது. ⭐

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌺 "தாரக" மந்திரம் என்பதற்கு "உயிர் மூச்சாய் தரித்திருப்பது" என்று ஒரு அர்த்தம் இருந்தாலும்,  "கடத்தல்" என்று மற்றொரு பொருளும் இருக்கிறது..



⚡ எதைக் கடத்துகிறது?..


பிறவிச்சுழலிலிருந்து இந்த ஜீவாத்மாவை கடத்த வல்லதாம் இந்த ராம நாமம்!


🍁 ராம நாம ஜபம் நன்மையும், செல்வமும் நல்குவதாய்ச் சொல்கிறார்கள்..


🍁 என்ன நன்மை?..


🍁 என்ன செல்வம்?..


🍁 "ரா..ம" (ஆன்மாவிற்கான அனுக்ரஹம்)  என்று ப்ரார்த்தித்துக் கொண்டே இருந்தால், தன்னடையே, நமது மனத்தின் மலங்கள் நீங்குகின்றனவாம்!

.....இது நன்மை!


🍁 செல்வமாவது, "பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டுக் கைங்கர்ய ப்ராப்தத்தை அடைவது" என்பதாம்!


விடாமல், "ராம ராம" என்று சொல்லி, ஆன்மாவின் அனுக்ரஹத்துக்காக ப்ரார்த்திக்கும்போது, "ததாஸ்து" தேவதைகள், "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்!) என்று சொல்லி அனுக்ரஹிக்கிறார்களாம்!


இதனால் நமது காரியமும், தடைகளைத் தகர்த்தெறிந்து, இலக்கை வெகு எளிதில் அடைகிறதாம்!


🍁 உயிரோடு இருக்கும் போது, "தாரக" மந்திரமாய் ஜபிக்கப் படுகின்ற இந்த "ராம" மந்திரம், உடலை விட்டு உயிர் வெளியேறும் நேரம், "கர்ண" மந்திரமாய், செவியில் ஓதப்படுகிறதாம்.

அந்த நாமத்தைக் கேட்டுக்கொண்டே பிரிகின்ற பிராணனானது, மீண்டும் வேறுடல் புகுவதில்லையாம்!


🍁 காசியின் கங்கைக் கரையில் மரிக்கும் உயிர்களுக்கு சாக்ஷாத் பரமசிவனே கர்ண மந்திரமாய், ராம மந்திரத்தைச் செவிகளில் ஓதி, அந்த உயிர்களுக்கு மோக்ஷ கதி ப்ராப்தமாகும்படி செய்கிறதாக, இன்றும் நம்பப்படுகிறது.


ஆனால், அத்தனைப்பேரும், காசிக்குச் சென்றுவிட முடியாதல்லவா?..


🍁 அதனால் இறக்கும் தருவாயில், செவிகளில் புத்திரன் "ராம"மந்திரத்தைச் சொல்வதால், அந்த ஜீவன் முக்தியடைகிறதாம்!


ஆனால், தசரதனுக்கு இறக்கும் தருவாயில் எந்தப் புத்திரனும் அருகில் இல்லையே...

...எனில் அவரது ஆத்மாவின் நிலை என்ன?..


🍁 "கர்ண" மந்திரம் சொல்வதற்கு எந்தப் புத்திரனும் பக்கத்தில் இல்லாததால், துக்கத்தில் தசரதனையே, "ராமா, ராமா..." என்று கதற வைத்தானாம் எம்பெருமான்!


அப்பேர்ப்பட்ட "ராம" நாமத்தைச் சுமந்திருந்ததால்தான் தசரதன் மைந்தனுக்கே ஏற்றமாம்!


🌞 நாடகத்தில் ஒரு பாத்திரம் கொடுக்கப்படும்போது, எப்படி அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறோமோ, அதுபோலவே, ராமனும், தான் ஏந்திய பெயருக்குத் தகுந்தாற் போலவே நடந்து கொண்டானாம்!..


எப்படி?..


⚡ அவனே சொல்கிறான்...


 "அபயம் ஸர்வ பூதேப்யோ!" என்று..


🍁 தன்னைத் தஞ்சம் அடைந்தவர்களை ஒருபோதும் அவன் தவிக்க விட்டதில்லையாம்!


"சரணாகதி" செய்து விட்டால் போதுமாம்..


     🌺   "ததாமி ஏதத் வ்ரதம் மம"...  🌺


(கொடுப்பதை என் விரதமாகவே வைத்திருக்கிறேன்!) என்கிறான் ராமன்!


பெயருக்கேற்ற குணவானுமாம் ஶ்ரீராமன்!..


"யதி வா ராவண ஸ்வயம்" என்கிறான்...


"ஸ்வயம் ராவணனே என்னிடம் தஞ்சம் புகுந்தாலும், நான் அவனுக்கு அபயமளிப்பேன்!" என்கிறான் ராமன்!


🍁 இப்படி எல்லா ஆன்மாவிற்கும் அனுக்ரஹம் செய்வதையே நோக்கமாகக் கொண்ட திருநாமமாம் "ராம" நாமம்!


அதனால்தான், அயோத்தியிலிருந்து புறப்பட்டுத் தான் விண்ணுலகம் ஏகும்போது,


புற்பா முதலாய் புல்லெறும்பாதி ஒன்றின்றியே, அயோத்திவாழ் அனைவரையும்,

நற்பாலுக்குய்த்தனனாம், நம் நாயகனான ஶ்ரீராமன்!


🍁 "ராம" மந்திரம் காரியம் செய்யும் என்பதற்கு, இப்படிப் பலப்பல ப்ரமாணங்களையும் காட்டித் தருகின்றனர், நம் பெரியோர்..


"ஸஹஸ்ர நாம தத்துல்யம்" என்கிறாரே பரமசிவன்...


🍁 .... எனில், எம்பெருமானின் ஆயிரம் திருநாமங்களுக்கும் இது ஒன்றே சமானமாய் ஆகிறதோ? என்ற விஷய ஞானம் மிக்க பண்டிதர்களின் கேள்விக்கு, பெரியோர்கள் சொல்கின்ற சமாதானம் வெகு அழகு!..


🍁 எம்பெருமானை கோடி நாமங்களைக் கொண்டு துதிக்கின்ற ஸ்துதி ஒன்று இருக்குமானால், "ராம" நாமம், "கோடி நாம" தத்துல்யமாம்!..


🍁 ஸஹஸ்ர கோடி நாமங்களால் எம்பெருமானுக்கு ஒரு ஸ்துதி இருந்தால், "ராம" நாமம் "ஸஹஸ்ர கோடி" தத்துல்யமாம்!


இப்படி, தம்மையே தமர்க்கு நல்கும் "தனிப்பெரும் பதமாம்" இது!


🍁 அந்த மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரமும்

எழுமை நோய்க்கும் மருந்துமாகிய "ராம" மந்திரத்தையே,


🍁 பரமசிவனார், "ஶ்ரீராம ராம ராம" என்று தியானித்து, தாம் ஆனந்தக் கடலில் மூழ்குவதாகச் சொல்கிறார்!


இந்த "ராம" நாமத்தின் பெருமையை வலியுறுத்தவே, மீண்டும் ஒருமுறை,

"ஶ்ரீராமநாம வரானன ஓம் நம இதி" அழுத்திச் சொல்லியாகிறது!


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் −பலஸ்ருதி..)


🍎  ப்ரஹ்மோவாச − 🍎


நமோஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே

ஸஹஸ்ரபாதாக்ஷிஸிரோருபாஹவே

ஸஹஸ்ரநாம்னே புருஷாய ஸாஸ்வதே

ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம: (28)


ப்ரம்மதேவன் கூறுகிறார்


அனந்தாய − அந்தமில்லாதவனே!


நம: அஸ்து − (உனக்கு) நமஸ்காரம்!


ஸஹஸ்ர மூர்த்தயே − ஆயிரக்கணக்கான திருவுருவங்களை உடையவனே!


ஸஹஸ்ர − ஆயிரக்கணக்கான


பாத: − பாதங்களையும்


அக்ஷி: − கண்களையும்


ஸிர: − தலைகளையும்


ஊரு − தொடைகளையும்


பாஹவே − தோள்களையும்


ஸஹஸ்ர − ஆயிரக்கணக்கான


நாம்னே − திருநாமங்களை உடையவனாயும்

(இருக்கின்றவனும்)


ஸஹஸ்ரகோடி − ஆயிரம்கோடி


யுகதாரிணே − யுகங்களை நடத்திச் செல்பவனாயும்


ஸாஸ்வத புருஷாய − அழிவில்லாத பரம்பொருளுமாகவும் உள்ளவனுக்கு


நம:  − நமஸ்காரங்கள்.


மேல் ஸ்லோகத்தால் ப்ரம்மதேவன் எம்பெருமானான ஶ்ரீமந்நாராயணனைத் துதிக்கின்றார்:−


"அந்தமில்லாதவனுக்கு நமஸ்காரங்கள்.


ஆயிரக்கணக்கான திருவுருவங்களையும்,

ஆயிரக்கணக்கான பாதங்கள், கண்கள், சிரங்கள், தொடைகள், தோள்கள் ஆகியவற்றை உடையவனும்,

ஆயிரக்கணக்கான திருநாமங்களை உடையவனும், ஆயிரம் கோடி யுகங்களை நடத்திச் செல்பவனுமான அழிவில்லாத பரம்பொருளை நமஸ்கரிக்கிறேன்..


இந்த இடத்தில் ப்ரம்மன் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதை பெரியோர்கள் வெகு அழகாகக் காட்டித்தருகின்றனர்.


🙏  ப்ரம்மன் யார்?..


சாக்ஷாத் எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவன்.


எம்பெருமானுக்குத் தனயன்..


🙏 தனயன், தந்தையைப் புகழ்கிறார்!..


"என் தந்தையின் பெருமைகள் அளவிட முடியாதது!.. 

அவருக்கு வெறும் ஆயிரம் திருநாமங்கள் மட்டுமல்ல..

ஆயிரக்கணக்கான 

திருவுருவங்களும் உண்டு!


🙏 ஆயிரக்கணக்கில் பாதங்களும், கண்களும், சிரங்களும், தொடைகளும், தோள்களும் உடையவர்!


🙏 ஆயிரம்கோடி யுகங்களை அனாயாசமாக நடத்திக் கொண்டு செல்கின்ற பெருமை படைத்த சாஸ்வதமான பரம்பொருள் அவர்!"


அவரை நான் நமஸ்கரிக்கிறேன்.." 

......என்கிறார்.


எதற்கு இத்தனை வர்ணனைகள் என்றால், 

அவரது அத்தனை(தந்தையை) ஆயிரம் திருநாமங்களால் துதிப்பது சாலப் பொருத்தமே என்பதைச் சொல்வதற்காக, அவர் திருவாக்கிலிருந்தே வந்த விஷயமாம் இது!


"நீங்கள் ஆயிரம் நாமங்களால் துதிக்கின்ற எனது தந்தையாகிய பரமபுருஷனின் பெருமைகளைக் காணுங்கள்.. அவற்றுக்கு ஈடுஇணையே இல்லை!"

..... என்கிறபடியுமாம்!


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


⭐  ஸஞ்சய உவாச:− ⭐


யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ

யத்ர பார்த்தோ தனுர்தர:

தத்ர ஶ்ரீர்விஜயோபூதிர் 

த்ருவாநீதிர் மதிர்மம (29)


(இது பகவத் கீதையின் 18ம் அத்யாயத்தில் வருகின்ற 78வது ஸ்லோகம்.)


🌿 இத்தனை நேரமும் அனைத்தையும் திவ்ய த்ருஷ்டியினால் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயன், த்ருதராஷ்டிரனுக்கு மேற்கண்ட உரையாடல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன என்பதைத் தெரிவிக்கும்போது கூறியது இது..


யத்ர − எங்கே


யோகேஸ்வர − எல்லா விதமான யோகங்களுக்கும்  ஈஸ்வரனான


க்ருஷ்ணோ − ஶ்ரீக்ருஷ்ணனும்


யத்ர − எங்கே


தனுர் தர: − வில்லேந்திய


பார்த்தோ − பார்த்தனாகிற அர்ஜுனனும்


(இருக்கின்றனரோ)


தத்ர − அங்கே


ஶ்ரீ: − வளம் (செல்வம்)


விஜய − வெற்றி


விபூதி − மங்களம் (செழுமை)


நீதி − நேர்மை

(ஆகியவை)


த்ருவ: − அசைக்கமுடியாமல்  நிச்சயமாய் இருக்கின்றன.


(இது)


மம −என்னுடைய


மதி:− முடிவான கருத்தாகும்.


சஞ்சயன் கூறுகிறான்:−


🌿 "எங்கே யோகேஸ்வரனான ஶ்ரீக்ருஷ்ணனும், வில்லேந்திய அர்ஜுனனும் இருக்கின்றனரோ,  அங்கெல்லாம் வளமும், வெற்றியும், மங்களமும், நீதியும் அசைக்க முடியாமல் நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றன என்பது எனது கருத்தாகும்"


🌿 சஞ்சயன் இதை எதற்காக த்ருதராஷ்டரனிடம் சொல்ல வேண்டும்?..


காரணம் இருக்கிறது..


"உனது மகன் துரியனைப் போல அதர்ம வழியில் செல்லாமல், 

பாண்டு புத்திரனான அர்ஜுனன், "க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்" என்பதை உணர்ந்தவனாய், அந்த ஜகத்காரணனான ஶ்ரீக்ருஷ்ணனையே புகலடைந்திருப்பதால், அவனுக்கே வெற்றி நிச்சயம்" 

என்று த்ருதராஷ்டிரனுக்குத் தெளிவு படுத்துகிறானாம் சஞ்சயன்!


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய இரண்டு விஷயங்களையும் பெரியோர்கள் நமக்குக் காட்டித் தருகிறார்கள்..


🍁 முதலாவது..


எத்தனைதான் நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும்,  அதற்கு இறைவனுடைய அனுக்ரஹம் இல்லையெனில், அந்தக் காரியம் பரிமளிப்பதில்லை.


🍁  இரண்டாவது, எவ்வளவுதான் இறைவன் அனுக்ரஹித்தாலும், நமது முயற்சி சிறிதேனும் இல்லையெனின், அங்கும் வெற்றியைக் காணவியலாது.


"நஹி ஸுப்தஸ்ய ஸிம்ஹஸ்ய

ப்ரவிஸந்தி முகே ம்ருகா:"

என்கின்றனர் பெரியோர்..


ம்ருகா : − மிருகங்கள்


ஸுப்தஸ்ய − உறங்குகின்ற


ஸிம்ஹஸ்ய − சிங்கத்தினுடைய


முகே − வாயினுள்


நஹி ப்ரவிஸந்தி − நுழைவதில்லை (சென்று விழுவதில்லை).


சிம்மமே ஆயினும், உறங்கிக் கொண்டிருந்தால், அதனுடைய பசி தீராது.


அது எழுந்து காரியம் செய்ய வேண்டும்!


இப்படி, முயற்சியும் (பார்த்தன்),

தெய்வ அனுக்ரஹமும் (யோகேஸ்வர: க்ருஷ்ண) ஆகிற இருவிஷயமும் ஒன்று சேருமிடத்தில்,


🌿 "ஶ்ரீர்விஜயோபூதிர் த்ருவா நீதி" −


செல்வ வளம், வெற்றி, மங்களம், நேர்மை எல்லாம் நிச்சயம்..


.....என்கிற நெறி மேற்கூறிய ஸ்லோகத்தினால் உணர்த்தப்படுகிறதாம்!


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

⭐(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் − பலஸ்ருதி..)


♻  ஶ்ரீபகவான் உவாச:−


அனந்யாஸ்சிந்தயன்தோ மாம்

யே ஜனா பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபியுக்தானாம்

யோகக்ஷேமம் வஹாம்யஹம் (30)


இந்த ஸ்லோகம் பகவத் கீதை 9வது அத்யாயத்தில் வருகின்ற 22வது ஸ்லோகமாகும்.


பகவான் கூறுகிறார்:−


யே ஜனா − எந்த மனிதர்கள்


அனன்யா − வேறு எந்த விருப்பங்களும் இன்றி


மாம் − என் ஒருவனையே


சிந்தயந்தோ − நினைவாலும்


பர்யுபாஸதே − சரணடைகிறார்களோ,


நித்ய −எப்பொழுதும்


அபியுக்தாயாம் − பக்தியில் உறுதிபட இருக்கின்ற


தேஷாம் − அவர்களுக்கு


அஹம் − நான்


யோக − எல்லாவிதமான யோகங்களையும்


க்ஷேமம் − நன்மைகளையும்


வஹாமி − அனுக்ரஹிக்கிறேன்.


இது மேலெழுந்தவாரியான பொருளே.


🌺 "பகவானே திருவாய் மலர்ந்து கூறும்போது வெகுசாதாரணமான யோகங்களையும், நன்மைகளையும் பற்றியா பேசுவான்?..." என வினவுகின்றனர் பெரியோர்.


அவர்களது விளக்கங்களை இப்போது காணலாம்..


"அபியுக்தாயாம்" என்பது உறுதியான பக்தி என்கிற ஒரு பொருளைத் தந்தாலும்,

 

 "யுக்தம்" என்பது "இணைந்திருத்தலை"யே குறிக்கிறதாம்!


யாரோடு இணைந்திருத்தலை?..


வேறு யார்?..


🌺 நம் எம்பெருமானைவிட்டு "அகலகில்லேன்" என்று அவன் திருவடியில் விழுந்து கிடப்பதையே, இந்த "யுக்தம்" என்ற வார்த்தை சொல்கிறதாம்!


நித்ய அபியுக்தாயாம் − எப்பொழுதும் இணைந்திருக்க விழைகின்ற நிலையைச் சொல்கிறது.


இப்படி எம்பெருமானோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கக்கூடிய நிலையை விரும்புபவர்கள்,


🌺 மற்றெல்லா விருப்பங்களையும் துறந்து, அவன் ஒருவனையே சரணாக அடையும்போது,


அவன், 


யோகம் − (அப்படி) தன்னோடு சேர்ந்திருக்கின்ற ப்ராப்தத்தையும்


க்ஷேமம் − மீண்டும் ஸம்ஸாரத்திற்கு திரும்புதல் இல்லாத க்ஷேமத்தையும்


அனுக்ரஹிக்கிறானாம்!


லௌகீகமான உதாரணத்தாலும் இதை அழகாக விளக்குகிறார்கள் பூர்வர்கள்.


🌺 எல்லாம் தரவல்ல காமதேனுவை வைத்துக் கொண்டிருப்பவன், அதனிடத்தில் "மேலான பொருளை" வேண்டிப் பெறாமல், 

பத்து நாட்களில் அழுகக் கூடிய ஒரு மாங்கனியை வேண்டிப் பெற்றால் எவ்வளவு மடமையாக இருக்குமோ, அவ்வளவு மடமையான செயலாம், சர்வ வல்லமை படைத்தவனிடம், சாதாரண விஷயங்களுக்கு யாசித்து நிற்பது!


🌺 பஞ்சபக்ஷ பரிமாணமாய் சமைத்திருக்கின்ற விருந்தை உண்ணச் சென்றவனுக்கு, வீட்டில் இருக்கின்ற பழைய சோறு சட்டென்று மறந்து போய்விடுவது போல,


எம்பெருமானுடன் சேர்ந்திருக்கின்ற ப்ராப்தம் கிடைத்துவிட்டால்,


இந்த ஸம்ஸாரத்தின் தாபங்கள் சட்டென்று நம்மை விலகிவிடுமாம்!


அதனால், நாம் கேட்டுப் பெறுகின்ற "யோகமும்", "க்ஷேமமும்" உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று காட்டித் தருகின்றனர்.


🌺 பரித்ராணாய ஸாதூனாம்

வினாஸாய ச துஷ்க்ருதாம்

தர்மஸம்ஸ்தாபனார்த்தாய

ஸம்பவாமி யுகேயுகே (31)


இந்த ஸ்லோகம் பகவத்கீதையின் 4வது அத்யாயத்தில் 8வது ஸ்லோகமாக வருகிறது.


ஸாதுனாம் − அடியவர்களை


பரித்ராணாய − ரக்ஷிப்பதற்காகவும்


துஷ்க்ருதாம் − துஷ்ட செயல்களை செய்பவர்களை


வினாஸாய ச − அழிப்பதற்காகவும்


தர்ம − நீதியை


ஸ்ம்ஸ்தாபனார்த்தாய − நிலைநாட்டுவதற்காகவும்


யுகேயுகே − யுகங்கள் தோறும்


ஸம்பவாமி − (நான்) தோன்றுகிறேன்..


மேற்படி ஸ்லோகமும் கண்ணன் எம்பெருமான் திருவாக்கிலிருந்தே வந்தது...


🌺 "சாதுக்களை (அடியவர்களை) ரக்ஷிப்பதற்காகவும், துஷ்டர்களை சிக்ஷிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும்,  யுகங்கள்தோறும் நான் தோன்றுகிறேன்..."


இந்த மேலோட்டமான பொருளிலிருந்து முழுவதும் வித்யாசமாய் நமது பெரியோர்கள் செய்கின்ற வ்யாக்யானம் ப்ரமிக்கத் தக்கதாய் இருக்கிறது!.


ஸாதூனாம் − அடியவர்கள்


துஷ்க்ருதாம் − துஷ்ட செயலைச் செய்பவர்கள்


இருவருமே, நமக்கு  வெளியேயிருந்துதான் வருகிறார்கள் என்பதில்லையாம்!


ஸாத்வீகமான சிந்தனைகளில் இருக்கும்போது, நமது மனம் ஒரு ஸாதுவைப் போன்றும், 

அதுவே, தீய எண்ணங்களுக்கு இருப்பிடமாகும் போது, நமது ஆன்மநாசத்துக்குக் காரணமாகி, "துஷ்க்ருதாம்" (துஷ்ட செயலைச் செய்பவர்) ஆகவும் மாறிவிடுகிறதாம்..


மாறிமாறி அலைக்கழிக்கப்படுகின்ற எண்ணக் கலவைகளினால், ஆத்மாவிற்குக் கிடைக்க வேண்டிய நீதி (தர்மம்) மறுக்கப்படுகிறதாம்!


ஆத்மாவுக்கான நீதியாவது, இறையோடு கலந்திருத்தலாம்...

அந்த நீதியைக் கிடைக்கவொண்ணாது செய்கின்ற துஷ்ட சிந்தனைகளை விலக்கி, ஸத் சிந்தனைகளைப் பாதுகாக்க, நான், உனக்குள்ளேயே அவதரிக்கிறேன் என்கிறானாம் எம்பெருமான்!


இங்கே, "யுகே யுகே" என்பதற்குப் பூர்வர்கள் அருளுகின்ற வ்யாக்யானம், வாஸ்தவமாகவே சிலிர்க்க வைக்கிறது..


தீய எண்ணங்களுக்கு ஆட்ப்பட்டு, 

எம்பெருமானிடமிருந்து விலகுகின்ற ஒவ்வொரு கணமும், அடியவர்களுக்கு ஒரு யுகத்தைப் போன்ற பிரிவுத்துயரை உண்டாக்கவல்லதாம்!..


அந்தமாதிரி வேதனையைத் தருகின்ற அந்த ஒவ்வொரு கணமாகிற யுகத்திலும், நான் உன்னுள் தோன்றி, உனது தீய எண்ணங்களை அழித்து, ஸத்விஷயங்களில் உன்மனம் ஆழ்ந்திருக்கும்படி செய்து, உனது ஆத்மரக்ஷணத்தை (தர்ம ஸமஸ்தாபனார்த்தாய) நிலைபெறச் செய்கிறேன் என்கிறானாம் பகவான்!


இப்படி....பெரியோர்களின் பகவத் அனுபவங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்வதே, நமக்கு எம்பெருமான் செய்கின்ற பெரிய க்ருபையே அல்லவா?...


🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் − பலஸ்ருதி..)


🦐 ஆர்த்தா விஷண்ணா சிதிலாஸ்ச பீதா

கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:

ஸங்கீர்த்ய நாராயண ஸப்தமாத்ரம்

விமுக்த துக்கா: ஸுகினோ பவந்து ( 32)


பகவான் தொடர்ந்து கூறுகிறார்:−


ஆர்த்தா − துக்கத்தில் இருப்பவனும்


விஷண்ணா − விஷம் போல எரிக்கும் கவலைகளில் ஆழ்ந்தவனும்


சிதிலா ச− மனம் உடைந்து இருப்பவனும்


பீதா: − அச்சமடைந்திருப்பவனும்


கோரேஷு  − அதிபயங்கரமான


வ்யாதிஷு − நோய்களினால்


வர்த்தமானா: ச − பீடிக்கப்பட்டிருப்பவனும்


நாராயண ஸப்தம் −

"நாராயணா" என்ற நாமத்தை


ஸங்கீர்த்ய மாத்ரம் − உச்சரித்த மாத்திரத்திலேயே


துக்கா: விமுக்த − துக்கங்களிலிருந்து விடுதலை அடைந்தவனாய்


ஸுகினோ − சுகத்தை (ஆனந்தத்தை)


பவந்து − அடையப் பெற்றவனாகிறான்.


🍂 துக்கம் கொண்டவனும், பெருங்கவலைகளை உடையவனும், மனமுடைந்தவனும். அச்சமுற்றிருப்பவனும், அதிபயங்கரமான நோயினால் பீடிக்கப்பட்டிருப்பவனும்"நாராயணா" என்று உச்சரித்த மாத்திரத்திலேயே, தமது துக்கங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று, ஆனந்தத்தை அடைகிறான்.


"நாராயணா" என்று உச்சரித்த மாத்திரத்திலேயே, இத்தனை நிவாரணங்களும் கிடைத்து விடுகின்றனவா என்ற ஐயம் எழுவது மனித இயல்பே!


இந்த இடத்தில் ஆழ்வாரின் திருவாக்கை ப்ரமாணமாகக் காட்டுகின்றனர் பெரியோர்..


🍂 "அடியார் படுதுயராயினவெல்லாம்

நிலந்தரச்செய்யும் நீள்விசும்பருளும்..

................

🍂 பெற்றதாயினுமாயின செய்யும்

நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன்

நாராயணாவென்னும் நாமம்"


இங்கே, பெரியோர்களின் வ்யாக்யானம் நம்மை யோசிக்க வைக்கிறது..


🍂 ஒரு ஜீவனுக்குப் பெற்ற தாயை விட, நன்மை நினைப்பார் வேறொருவர் இல்லை..இது உலக வழக்கு!


அப்படிப்பட்ட அந்தத் தாயினைக் காட்டிலும், நன்மை செய்யவல்லது நாராயண நாமமே என்று எதைவைத்து ஆழ்வார் சொல்கிறார்?..


🍂ப்ரஹலாத சரித்திரத்தைக் கையில் எடுக்கிறார்கள்..


🍂 பெற்ற தாயே தனது கைகளினால், பாலகனுக்கு விஷம் தர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.


ஆனால், அவன் உச்சரித்துக் கொண்டிருந்த நாராயண நாமம், அவனைக் காப்பாற்றிவிடுகிறது.


🍂 பெற்றவள் பார்த்திருக்க, தொடர்ச்சியாக வருகின்ற சோதனை அனைத்திலிருந்துமே, அந்த நாமமே அவனை விடுவிக்கிறது!


அடுத்ததாக துருவ சரித்திரம்...


🍂 துருவனைப் பெற்றவளினால், தன் பாலகனைத் தந்தை மடியில் இருத்திப் பார்க்க இயலவில்லை!


அவளே கைகாட்டுகிறாள்..


"லோகமாதா இருக்கிறான்... அவனது நாம ஜபம், உனக்கு அனைத்தையும் பெற்றுத்தரும். நீ முயன்றுபார் குழந்தாய்!"

...என்கிறாள்.


🍂 பெற்றதாயினுமாயின செய்பவன், அந்தக் குழந்தையின் அழைப்பை ஏற்று, அவனுக்கு அனுக்ரஹிக்க ப்ரத்யக்ஷமாகி விடுகிறான்!


இப்படி, அழைத்தவர் குரலுக்கு வந்துவிடுபவன் அவன்!


இந்தப் பிறவியோடு முடிவடையக்கூடிய, பெற்றவளின் சம்பந்தத்தைக் காட்டிலும், ப்ரளயகாலத்திலும், தனது திருவயிற்றில் வைத்து நம்மை எல்லாம் ரக்ஷிக்கின்ற அந்த லோகமாதாவுடனான சம்பந்தம்

"உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது" என்னுமாப்போலே, அறுகாத சம்பந்தமாகும்!..


🍂 அந்தத் தாயைக் காட்டிலும், நமக்கு ஹிதம் (நன்மை) செய்ய யாரால் ஆகும்?..

....என்கின்றனர் பெரியோர்!


அடுத்ததாக, "ஸப்த மாத்ரம்" என்று சொல்வதும் விமரிசிக்கப்படுகிறது..


🌺  நாராயண நாமத்தை உச்சரிக்கும்போதே துக்கங்கள் விலகுவதும், சுகம் நிறைவதும் எப்படி சாத்யமாகிறது என்று விளக்குகின்றனர் நம்பூர்வர்கள்..


🌺 வேங்குழலின் இசைக்கு, அன்று தம்மை மறந்து, தமது கைக்காரியங்களை மறந்து, சுற்றம் மறந்து, சொந்தம் மறந்து, ஓடிச் சென்றனர் கோபியர்..


வேறு எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை!


அதனால், வேறு எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்தவுமில்லை!


அவர்களை ஆட்கொண்டதெல்லாம், அந்த வேங்குழல் நாதம் ஒன்றே!..


அப்படி வந்தவர்களை, கண்ணனும் குளிரக் கடாக்ஷித்தான்!


குழல் ஊதி அவன் நம்மை அழைத்தாலென்ன? இல்லை, குழலுக்குரியவனை நாம் அழைத்தாலென்ன?..


"ஆட்பட்டுவிட்டால்", மற்றவை எல்லாம் துச்சமே!

என்று நிர்ணயம் செய்கிறார்கள் பெரியோர்!..


அழைக்கின்ற குரலின் ஆதரமாயிற்று, அவன் பார்ப்பது!


ஆத்மார்த்தமாய் அவனைக் கூப்பிட்டால், தன்னையே கொடுத்துவிடக் கூடியவனை, நமக்கு மட்டும் சரியாக அழைக்கத் தெரிந்தால்,  இந்த சம்சாரப் பெருநோயிலிருந்து எளிதில் பிழைத்துக் கொள்ளலாம் என்பது பெரியோர்களின் தீர்மானமாகும்..


நாம் சங்கீர்த்தனம் பண்ணுகிற அந்த "நாராயண" சப்தம், அவனைச் சென்றடையும்படி பார்த்துக்கொள்வது மட்டுமே, நமது காரியமாகும்!..


இடிசப்தத்திற்குப் பிறகு மழை வருவது போல, இந்த நாராயண சப்தம், அவனது அருள்மழையைத் தன்னடையே கொண்டு வருமாம்!


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


 (ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பலஸ்ருதி..)


⭐  காயேன வாசா மனஸேந்த்ரியை வா

புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி"


காயேன  − உடலாலோ


வாசா −  வாக்கினாலோ


மனஸ் − மனதினாலோ


இந்த்ரியை (வா) − இந்த்ரியங்களினாலோ


புத்தி − அறிவினாலோ


ஆத்மனா (வா) ஆத்மாவினாலோ


ப்ரக்ருதே ஸ்வபாவாத் − 

இயற்கையான குணவிஷேஸத்தினாலோ


யத்யத் − எதுஎதைச்


கரோமி − செய்கின்றேனோ


ஸகலம் − அவை அனைத்தையும்


பரஸ்மை நாராயணா இதி − பரமபுருஷனாகிய நாரயணனுக்கே


ஸமர்ப்பயாமி − ஸமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்).


⭐ உடலாலும், வாக்கினாலும், மனதினாலும், இந்திரியங்களினாலும், அறிவினாலும், ஆத்மாவினாலும், ஸ்வபாவத்தினாலும் எதுஎதைச் செய்கிறேனோ, அவை அனைத்தையும் பரமபுருஷனாகிய ஶ்ரீமந்நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன்.


⭐  இந்த சாதாரண அர்த்தத்திற்கு, நமது பெரியோர்கள் விசேஷமாக உரையிடுகிறார்கள்.


உடலினால் செய்கின்ற, செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகத் தெரிகிறது.


அது என்ன மனம், இந்திரியங்கள், புத்தி, ஆத்மா போன்றவற்றால் செய்கின்ற செய்கை?..


⭐  நமக்குள் இருந்து கொண்டு, இவைகள் அனைத்தும் செய்கின்ற வியாபாரம், மற்றவர்க்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்..

ஆனால், நம்முள் அந்தர்யாமியாக இருக்கின்றவன், நமது ஒவ்வொரு புலனின் அசைவையும், நோக்கத்தையும் நன்றாகவே உணர்பவனாய் இருக்கிறானாம்!


மனத்தால் செய்கின்ற மானஸீக பூஜையையும் இறைவன் மிகவும் சந்தோஷத்தோடு ஏற்கிறானாம்..


⭐  இந்திரியங்கள் என்பது ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றைக் குறிக்கிறது..


⭐  இந்த இந்திரியங்களைக் கண்டவிடத்தும் அலையவிடாமல், இறைவன் திருநாமத்தைக் கேட்கவும், சொல்லவும் ஈடுபடுத்தும்போது அவன் வாஸ்தவமாகவே ஆனந்திக்கிறானாம்.


⭐ புத்தியால் அவனை அறிய முற்படும்போது, அந்த முயற்சியில் நாம் பலிதம் அடைகிறோமோ இல்லையோ, நமது அந்த ஈடுபாடு, அவனை ரொம்பவும் சந்தோஷப்படுத்துகிறதாம்..


இப்படி ஆத்மார்த்தமாக அவனை அனுபவிப்பதையே அவன் நம்மிடம் எதிர்பார்க்கிறானாம்!


⭐ ஆக, முக்கரணங்களும் ஒன்றி நாம் அவனைக் குறித்து, எந்தச் செயலைச் செய்தாலும், அவை அந்த முகுந்தனுடைய மனதை மகிழ்விக்கிறதாம்!..


⭐"முக்கரணங்கள் ஒன்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறதே.. என்ன செய்வது?" என்று கேட்பவர்களுக்குப் பெரியவர்கள் சொல்கின்ற சமாதானம், சற்று ஆறுதலாய் இருக்கிறது..


⭐ "ஸகலம் பரஸ்மை நாராயண இதி ஸமர்ப்பயாமி" என்பதை உணர்ந்து சொல்லிக்கொண்டே வந்தோமானால், 

கொஞ்சம் அப்படிஇப்படி அவனை விட்டு நமது நினைவோ, செய்கையோ அகன்று போனாலும், 

நாளடைவில் அந்த வார்த்தைகளின் சக்தி நம்மை வழிக்குக் கொண்டுவந்து விடுமாம்!


அவனைக் குறித்துச் சொல்கின்ற இந்த வார்த்தைகளுக்கே அவ்வளவு வீரியம் இருக்கிறதாம்!


⭐ "அதனால், "ஸகலம் ஸமர்ப்பயாமி"யை ஆத்மார்த்தமாகச் சொல்லிக் கொண்டு அவனை மெல்ல நெருங்கி, அவனால் சகல அனுக்ரஹமும் கிடைக்கப் பெற்று, நம்மை வருத்துகின்ற இந்தப் பிறவிப் பிணியை வெல்வோமாக!.."

.....என்கின்றனர் நம் பூர்வர்கள்...


முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா?..


நாமும் முயற்சிப்போம்!


(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பலஸ்ருதி ஸம்பூர்ணம்.)

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  🍁(ஸர்வம் ஶ்ரீ்க்ருஷ்ணார்ப்பணமஸ்து..)🍁




⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺