Sunday, 27 December 2020

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ! | மார்கழி ஸ்பெஷல் ! |bhakthivlog திருக்கதைகள்

 மார்கழி ஸ்பெஷல் !


எல்லா அவதாரங்களும் முடிந்தபின் வைகுந்தத்தில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன் தான் உபதேசித்த 'கீதா' சாரத்தினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறான். மஹாலட்சுமியை மீண்டும் அவதாரம் செய்யச் சொல்கிறானாம். அவள் மறுக்க பூமாதேவி அவதரிக்க ஒப்புக் கொண்டு கலி 98, நளவருடம், ஆடிமாதம், சுக்கில பட்ச சதுர்த்தசி, செவ்வாய்க் கிழமை, பூர நட்சத்திரத் திரு நாளில் ஶ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் மகளாய் அவதரித்தாள். அவள்தான் கோதா என்ற கோதை. கோதா என்றால் நல்ல வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி! ஆண்டாள் ! ஸ்ரீ ரங்கனை ஆண்டாள்!


கோதையால் புகழ் பெற்ற ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்றுமூர்

நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்

நான்மறைகள் ஓதும் ஊர்

வில்லி புத்தூர் வேதக் கோனூர்.



கோதையின் தமிழ்ப்பாசுரம் எப்படியானது? 'பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும்.' இதை அறியாதவர்கள் பூமியில் இருக்கவே லாயக்கற்றவர்களாம்! 'கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்

அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.'


கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூக்களால் ஆன மாலை. அந்த மாலையின் பூக்களே அவளுடைய தூதுவர்கள் ஆயின. மற்றொன்று பாமாலை! திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பெயரில் விளங்கும் கொஞ்சும் தமிழ்ப் பாடல்கள்.


திருப்பாவையில் தி என்ற எழுத்து. திருமாலை குறிக்கும். திரு என்ற சொல் மகாலக்ஷ்மியை குறிக்கும்.திருப்பா என்ற சொல் திருப்பாற் கடலை குறிக்கும்.


திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள 

மகாலக்ஷ்மியோடு உறையும் திருமாலை 

பள்ளி எழுப்புவதாக அமைக்கப்பட்ட

பாடல்களை கொண்டது திருப்பாவை



பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமான் 

இப்பூவுலகில் அறியாமையில் மூழ்கி 

இறைவனை மறந்து கிடந்த காலத்தில் மக்களை தட்டி எழுப்ப புவியன்னையே 

கோதையாக அவதாரம் எடுத்து இந்த மண்ணில் பரந்தாமன் எடுத்த 

அவதாரங்களை மேற்கோள் காட்டியும், 

இறைவனை எப்படி வணங்கவேண்டும், 

அவன் அருளை பெற என்னென்ன 

வழிமுறைகளை அனுசரிக்கவேண்டும் என்றும், அவனை வணங்குவதினால் 

கிடைக்கும் பேறுகள் என்ன என்பதையும், 

அனைவரும் அவன் புகழ் பாடுவதால்இந்த உலகமும், மக்களும் எப்படி செழித்து

வளமோடு இன்பமாக வாழ்வார்கள் 

என்பதையும் முப்பது பாடல்களாக

திருப்பாவை ஆக கோதை தந்தருளினாள்.


வேதங்களின் சாரத்தைத் தன்னுள் அடக்கிய பாடல்கள் திருப்பாவை என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

திருப்பாவை காட்டும் பாவை நோன்பு, ஆத்ம சமர்ப்பணம் செய்தல் என்ற உயரிய வழியைக் காட்டுகிறது.

திருப்பாவையை ஓதுவது மஹா யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !