Friday, 5 January 2018

பிள்ளை வரம் அருளும் சஷ்டி விரதம்

பிள்ளை வரம் அருளும் சஷ்டி விரதம்


முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

விரதம் இருக்கும் முறை :

🌟 அதிகாலை 4.30 - 6.00 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிடலாம். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம்.
🌟 முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ, ஓம் சரவணபவாயநம, ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
🌟 திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் ஆகிய பாடல்களில் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
🌟 மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.
🌟 மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
🌟 விரதமிருக்கும் போது மயில்வாகனனை நினைத்தே இருக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையிலும் மூழ்க கூடாது.
🌟 விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.
🌟 சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளை பெற வாழ்வில் அனைத்து செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும்.