Sunday, 27 December 2020

ஹரிவல்லபே' | bhakthivlog | MahaVishnu puranam |

ஹரிவல்லபே' என்று பெருமாளுக்குப் பிரியமானவளாகப் போற்றப்படும் ஸ்ரீமஹாலக்ஷ்மி, 'மனோக்ஞே’ என்றும் துதிக்கப் பெறுகிறாள். 

மனோக்ஞே என்றால் என்ன தெரியுமோ? அவளுடைய குழந்தைகளாகிய நம்முடைய உள்ளத்தை நன்கு அறிந்தவள் என்பதுதான். நமக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து வைத்துக்கொண்டு, 

அதைக் கொடுத்துவிடுகிறாள். பிராட்டியாருக்கு நம்முடைய மனமும் தெரியும், பகவானுடைய மனமும் தெரியும். மூன்று லோகங்களுக்கும் செளபாக்யங்களை அருளக் கூடிய மஹாலக்ஷ்மிதான், 

நம்முடைய தேவைகளை ஹரிக்கு எடுத்துச் சொல்லி, அதை நமக்குப் பெற்றுத் தருபவளாகத் திகழ்கிறாள். பெருமாளிடம் எப்படி சொன்னால் எடுபடுமோ... அப்படி எடுத்துச் சொல்லி, நமக்கு பெருமாளின் அனுக்கிரஹத்தைப் பெற்றுத் தருகிறாள். ஹரிக்கு பிரியமானவளாக மஹாலக்ஷ்மி இருப்பதால்தான் மஹாலக்ஷ்மிக்குப் பெருமையா என்றால், அதுதான் இல்லை. 

மஹாலக்ஷ்மி பெருமாளின் திருமார்பை அலங்கரிப்பதால்தான் பெருமாளுக்குப் பெருமையாம்! இப்படி நாம் சொல்லவில்லை, 

நம்மாழ்வார்தான் சொல்கிறார்.



கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டாறு என்ற திவ்விய தேசம் இருக்கிறது. ஆதிகேசவ பெருமாள் என்பது இறைவனின் திருநாமம். இங்குள்ள பெருமாள், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியின் திருவடி இருக்கும் திசையில் தம் திருமுடியையும், திருமுடி இருக்கும் திசையில் திருவடி யையும் வைத்தவராக காட்சி தருகிறார். திருவனந்தபுரம் பெருமாளின் நாபிக் கமலத்தில் பிரம்மா காட்சி தருவார். திருவட்டாறிலோ... பிரம்மா இல்லாமலேயே காட்சி தருகிறார். பிரம்மா தோன்றுவதற்கு முன்பே இங்கே பெருமாள் தோன்றிவிட்டார். அதனால்தான்  ஆதிகேசவன்!


திருவாட்டாறு திருத்தலத்துக்கு வந்த நம்மாழ்வார்,


 'திகழ்கின்ற திருமார்பில்


திருமங்கை தன்னோடும்

திகழ்கின்ற திருமாலார்

சேர்விடம் தண் வாட்டாறு

புகழ்நின்ற புள் ஊர்தி போர்

அரக்கர் குலம் கெடுத்தான்

இகழ்வின்றி என்நெஞ்சத்தில்

எப்பொழுதும் பிரியானே'


என்று பாடி இருக்கின்றார்.


பெருமாளின் திருமார்பு திகழ்கின்ற திருமார்பாம். திகழ்கின்ற என்றால், பிரகாசிக்கின்ற என்று சொல்லலாம். அந்த பிரகாசம் பெருமாளுக்கு எப்படி வந்தது தெரியுமோ? திருமங்கையாகிய மஹாலக்ஷ்மி, பெருமாளின் திருமார்பில் இருப்பதால்தான் என்கிறார் நம்மாழ்வார்.


ஏற்கெனவே பெருமாளின் திருமார்புக்கு வைபவம் அதிகம். இன்னும் திருமகள் வேறு அங்கே எழுந்தருளிவிட்டபடியால், எம்பெருமானின் வைபவம் கூடிவிட்டதாம். மஹாலக்ஷ்மி


 அவருடைய திருமார்பில் எழுந்தருளி இருப்பது எதனால் தெரியுமா? பெருமாளுடைய திருமார்பில் எழுந்தருளி இருந்தால், அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்று சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும் அல்லவா? அப்போதுதானே சமயம் பார்த்து நமக்கு என்ன தேவையோ அதை பெருமாளிடம் இருந்து பெற்றுத்தர முடியும்!




நாம் எல்லா வித்தைகளையும் கற்றிருப்போம். எல்லா விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், எல்லாம் வல்ல எம்பெருமானைப் பற்றி மட்டும் தெரிந்துகொள்ள மாட்டோம். அப்படி இருக்கும்போது, பகவானுக்கு மட்டும் நம்மைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆனால், மஹாலக்ஷ்மி அப்படி இல்லை. அவளுக்கு எப்போதுமே நம்முடைய நினைவுதான். நம்முடைய உள்ளத்தில் இருப்பதை எல்லாம் உள்ளபடியே தெரிந்துகொண்டு, நேரம் பார்த்து நமக்கு அருள்புரிபவள்.



பெருமாளுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். சமயத்தில் தன் பக்தர்களின் தேவைகளைப் பற்றி மட்டும் அவருக்குத் தெரியாமலேயே போய்விடுவது உண்டு. இப்படி சொல்லுவதற்கு ஏதேனும் பிரமாணம் இருக்கிறதா என்று கேட்கத் தோன்றும்.


திருஇந்தளூர் என்று ஒரு திவ்ய தேசம். சந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற திருத்தலம் என்பதால் திருஇந்தளூர் என்று பெயர். அங்கே எம்பெருமான் பரிமள ரங்கநாதராக சயனக் கோலத்தில் சங்கு சக்ரதாரியாக சேவை சாதிக்கிறார். பொதுவாக சயனக் கோலத்தில் பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சித் தருவது இல்லை. ஆனால், இந்த திருஇந்தளூர் திவ்விய தேசத்தில் பெருமாள் அப்படி ஓர் அற்புதக் கோலத்தில் திருக்காட்சி தருகிறார். இந்தப் பெருமாளை சேவிக்க வேண்டும் என்பதில் திருமங்கை ஆழ்வாருக்கு அலாதி பிரியம். நடையாய் நடந்து திருஇந்தளூரை அடைகிறார். அப்போது உச்சிகால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டுவிட்டது. நம்முடைய ஆழ்வாருக்கோ பெருமாளை உடனே சேவிக்க வேண்டும் என்ற தவிப்பு.


கோயில் பட்டாசார்யரைப் போய் பார்க்கிறார். அவரோ, ''காலை ஆறு மணிக்கு விஸ்வரூபம், ஒன்பது மணிக்கு காலசந்தி, பதினொன்றரை மணிக்கு உச்சிகாலம்; பதிணொண்ணே முக்காலுக்கு நடை அடைச்சுடுவாள். அப்புறம் நான்கரை மணிக்குத்தான்'' என்று நடைமுறையை சொல்கிறார்.


திருமங்கை ஆழ்வாருக்கு கோபம் வந்துவிட்டது, அந்த பரிமள ரங்கநாதரின் மேல்:


சொல்லாதொழியகில்லேன் அறிந்த சொல்லின் நும்மடியார்

எல்லோரோடுமொக்க எண்ணியிருந்தீர் அடியேனை

நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கிவ்வுலகத்தில்

எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரிலே.


'உம்மை சேவிக்க வந்திருக்கும் எனக்கு நீர் உடனே தரிசனம் தந்திருக்க வேண்டாமா? எல்லோரையும் போல் என்னையும் எண்ணி இருந்துவிட்டீரா? இந்த உலகத்தில் உள்ள நல்லவை, கெட்டவை அனைத்தும் நீர் அறிவீர். ஆனால், ஒரு பக்தனுக்கு என்ன வேண்டும் என்பது மட்டும் உமக்குத் தெரியாது போலும்.  உம்மை தரிசிக்கும் ஆவலில் வெகு தொலைவில் இருந்து வந்திருக்கும் எனக்கு ஒருமுறை எழுந்து நடந்து வந்து சேவை சாதித்தால் குறைந்தா போய்விடுவீர்? அன்று திரிவிக்கிரமனாக வந்து மூன்றடி நடந்தீர்; பிறிதொரு சமயம் ஒரு ராட்சஸனை அழிப்பதற்காக அயோத்தியில் இருந்து இலங்கை வரை நடந்தீர்; தர்மபுத்திரருக்கு ராஜ்யம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடையாய் நடந்து தூது சென்றீர். இவர்கள் அனைவருக்காகவும் நடந்த நீர், எனக்காக வெளியில் நடந்து வந்து தரிசனம் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்’ என்று உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார் திருமங்கை ஆழ்வார். பெருமானிடமே கோபித்துக்கொள்ளும் அளவுக்கு, மாசற்ற பக்தி கொண்டவர்.


'உமக்கு ராவணனைத் தெரியும்; கம்சனைத் தெரியும்; சிசுபாலனைத் தெரியும். ஆனால், பிரகலாதனைத் தெரியாது, விபீஷணனுக்கு என்ன வேண்டும் என்பது தெரியாது. அதுவும் இந்த திருமங்கை ஆழ்வாருக்கு என்ன வேண்டும் என்பது உமக்குத் தெரியவே தெரியாது’ என்றெல்லாம் அந்த இந்தளூர் பெருமானிடம், கோபத்துடனும் ஆதங்கத்துடனும் கேட்கும் திருமங்கை ஆழ்வாரின் கண்களுக்கு ஒரு திருவுருவம் தெரிகின்றது. திருமங்கை ஆழ்வாரின் கோபமும் ஆதங்கமும் கண்டு பெருமாள்தான் அவருக்கு தரிசனம் தந்துவிட்டாரா என்றால் அதுதான் இல்லை. பின் யாருடைய திருவுருவம் அவருக்குத்  தெரிந்தது தெரியுமோ?


- கடாக்ஷம் பெருகும்… மஹாலக்ஷ்மி........